இந்தியாவை மிரட்டும் டிரம்ப்

வாஷிங்டன்: கொரோனா சிகிச்சைக்கு, ஹைட்ராக்சிகுளோரோகுயின் எனப்படும் மலேரியா எதிர்ப்பு மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால், இந்தியாவுக்கு பதிலடி இருக்கக்கூடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்த வாரம் மிகவும் மோசமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று உள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும், கொரோனா பாதிப்புகள் குறித்து விவாதித்தனர். கொரோனா சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் எனப்படும் மலேரியா எதிர்ப்பு மருந்தை, அமெரிக்கா மார்ச் மாதம் ஆர்டர் செய்திருப்பதாகவும், அதனை அனுப்பி வைக்கும் படியும் அப்போது மோடியிடம் டிரம்ப் வலியுறுத்தினார். 'எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்' என மோடி கூறியிருந்தார்.


இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய டிரம்ப், “எங்களுக்கான மருந்தை அனுமதித்தால் நன்றாக இருக்கும் என மோடியிடம் கூறியிருந்தேன். அவர் எனது கோரிக்கையை நிராகரிக்கவில்லை. அமெரிக்காவுடனான இந்திய உறவு சிறப்பாகவே உள்ளது. ஒருவேளை அவர் அனுமதிக்கவில்லை என்றாலும் பராவாயில்லை. ஆனால், அதற்கான பதிலடி இருக்கக்கூடும்.” என கூறியுள்ளார்.

பிப்ரவரி மாதம் டிரம்ப் வருகையின் போது, வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்க இந்தியா விரும்பியது. அது நடைபெறவில்லை. இந்த ஆண்டு இறுதியில் ஒப்பந்தத்தை இறுதி செய்ய இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். தற்போது 'பதிலடி இருக்கக்கூடும்' என டிரம்ப் கூறியிருப்பது. இதனை பாதிக்கலாம் என்கின்றனர்.


 

 



இவ்விஷயத்தில் இந்தியா இதுவரை முடிவு எடுக்கவில்லை. உள்நாட்டில் தேவை அதிகரித்துள்ளதால், ஏற்கனவே இம்மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

உலகளவில் அதிகம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. மலேரியா எதிர்ப்பு மருந்தான இது, கொரோனாவுக்கு எதிராக செயல்படுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. இருப்பினும், சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிகழ்வதால், இம்மருந்தின் தேவை அதிகரித்துள்ளது.